இலங்கையின் வடபகுதியில் உள்ள அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயங்களும் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆரம்ப காலம் சிலப்பதிகார காலத்தையொட்டியது என்பது வரலாறு. இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டி நாட்டில் அரசனுக்கு எதிராக வழக்காடி மதுரையை எரித்த பின்னர் அவளின் கோபாவேசம் அடங்குவதற்காக இலங்கையின் கரையோரமாக வருகை தந்து பல இடங்கில் அமர்ந்திருந்து பத்தாவது இடமாக வற்றாப்பளை நந்திக்கடலில் வெளியில் இடைச்சிறுவர்களுக்கு காட்சி தந்து அவர்களுடைய பொங்கலை ஏற்றுக் கொண்டாள். புpன்னர் ஒவ்வொரு வைகாசி விசாகத்திற்கும் தான் அங்கு வருவதாகக் கூறி மறைந்தார் என்பது ஐதீகம். அதையொட்டி ஒவ்வொரு வைகாசி விசாகத்தன்றும் பக்தர்கள் பெருந்தொகையாகக் கூடிப் பொங்கல் பொங்கிப் படைத்து அம்மன் அருளைப் பெற்று ஏகுகிறார்கள்.
இங்கு ஆரம்பத்தில் கிராமிய வழிபாட்டு முறையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் வடபகுதியில் ஏற்பட்ட சமயப் புரட்சி காரணமாக பெருந்தெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றது. அண்மைக் காலத்தில் இங்கும் பெருந்தெய்வ வழிபாட்டிற்குரிய சீரிய முறைகளும் இணைக்கப்பட்ட கிரியா முறைகளுடன் கண்ணகை அம்மனுக்குப் பொங்கல் பொங்கி படைக்கப்படுகிறது. கண்ணகிக்கு பொங்கல் பொங்கிப் படைத்து அவளின் அருளைப் பெற விரும்பும் அநேக அடியார்கள்; வைகாசி விசாகத்தன்று இங்கு கூடுகிறார்கள். இவர்களும் தாமும் பொங்கில் பொங்கி கண்ணகிக்குப் படைத்து அவளின் அருளை வேண்டி நிற்கின்றனர். கண்ணகி தனது கோபாவேசத்தை குறைப்பதற்காக கரைப்பாதையாக கதிர்காமம் சென்றாள் என்பதை அடையாளப்படுத்துவதற்காக பொங்கல் நடந்த அடுத்த நாட்காலை பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை இங்கிருந்து ஆரம்பிக்கின்றனர்.
தொன்மைமிக்கதும், பிரசித்திபெற்றுதுமான இந்த ஆலயத்தின் வரலாற்றை எவ்வாறு ஆங்கிலேயர்கள் குறித்து வைத்துள்ளனர் என்பதை நோக்குவதே இந்தக் கட்டுரை. வுன்னி வரலாற்றை குறித்து வைத்துள்ள ஆங்கில நூல்களில் திரு. ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்துள்ள ஷமனுவல் ஒவ் த வன்னி டிஸ்றிக்ஸ்| குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தொகுக்கப்படும் சில தகவல்கள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் தொன்மையை எடுத்துக் காட்ட உதவும்.
வற்றாப்பளை:
நந்திக்கடலின் மேற்கு முனையில் தண்ணீரூற்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் வற்றாப்பளை இருக்கிறது. இங்கு கண்ணகை அம்மனுக்கான வருடாந்தப் பொங்கல் இடம் பெறுவது வழக்கம் (ஜேபில்.பக்.61)
Vattappalai, on the western shore of the Nantikadal, a mile or two from Thanniyuttu, is celebrated for its temple of Kannakai Amman and the annual festival there. (JPL. Page 61)
வன்னியில் உள்ள இடங்களில் பெயர்களைப்பற்றி ஜே.பி.லூயிஸ் குறிப்பிடும்போது வற்றாப்பளை என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வற்றாப்பளை என்றால் ஒருபோதும் நீர் வற்றாத இடமாகும்.
Vattappalai : A place where the water never dries up (Vatta = Dryup) (JPL)
நந்திக்கடல்:
யாழ்ப்பாண வைபவமாலையில் கல்வெட்டு என்ற பகுதியிலே அடங்காப்பற்று பற்றிய வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையை நியாயவாதி திரு. சி. பிறிற்றோ அவர்கள் 1879ஆம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மூலப்பிரதி கிடைக்காது போனமையால் ஆங்கிலப் பிரதியை ஆதாரமாக வைத்தே யாழ்ப்பாண வைபவமாலை பதிப்புகள் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி பெயர்ப்பின் கல்வெட்டுப் பகுதியிலுள்ள விபரங்களை வையாபாடலிலும் உள்ளன. திரு. பிறிற்றோ மொழிபெயர்த்த கல்வெட்டு விபரங்களை திரு.ஜே.பி.லூயிஸ் அவர்கள் வன்னி பற்றிய வரலாற்றிற்கு ஆதாரமாக்கியுள்ளார்.
கல்வெட்டு வரலாற்றின்படி, வன்னியர்கள் பனங்காமத்தில் ஆட்சி செய்த காலத்தில் முல்லைத்தீவுப் பிரதேசத்தை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடியாமல் இருந்தனர். இதனால் வன்னியர்கள் தமது ஆட்சியை முல்லைத்தீவு பிரதேசத்தல் பலப்படுத்துவதற்காக தூதுவர்கள் மூலம் உதவிகோரி செய்தியொன்றை தென்னிந்தியாவிற்கு அனுப்பினர்.
ஷஇந்தத் தகவல் முதலில் திருச்சிராப்பள்ளியை சென்றடைகிறது. அங்கிருந்து வரசிங்க ஆராய்ச்சி என்பவர் முல்லை-மலனார், சரகு-மலனார், சிவ்கை-மலனார் ஆகியோர் உட்பட்ட குழுவினருடன் முள்ளியவளை வந்து சேர்ந்தார். முள்ளியவளையில் தாமரைக்குளம் உட்பட பல குளங்களைக் கட்டுவதற்கு சேவைகளை வழங்கிஅ ங்கு வாழ்ந்து வந்தனர். வரசிங்க ஆராய்ச்சியினுடைய மகன் நந்தி என்பவராகும். அவருக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஏழுபேரும் சிவ வழிபாட்டில் ஆடுபட்டு அறுபது புனிதகிணறுகளில் புனித நீராடி கன்னிப் பெண்களாகவே வாழ்ந்தனர். இந்த ஏழு வன்னிய கற்புடைப் பெண்களை தெய்வங்களாக மதித்து இப்பிரதேச மக்கள் வழிபட்டனர். இவர்களுக்காக மன்னாகண்டலில் ஏழு கோயில்கள் கட்டப்பட்டன. இது கன்னியா கோயில் என அழைக்கப்பட்டது.|
சந்தேகத்துக்கிடமின்றி நந்தி என்பவருக்குப் பின்னரே இந்த ஏரி ஷநந்திக்கடல்| என்ற பெயரைப் பெற்றுள்ளது. (ஜேபிஎல் – 1895. புக்கம் 12, 13)
இந்தச் சிதைவுகளை கன்னியா கோவில் என பிரதேச மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள ஏழு கோயில்களிலும் வன்னியின் புனித தலைமைப் பெண்களே வழிபடப்படுகின்றனர். கல்வெட்டில் குறிக்கப்படும் நந்தியின் ஏழு கன்னிப் பெண்களையே இது குறிக்கின்றது. குறிப்பு ஜூன் 26இ 1890 (ஜேபிஎல். பக்.309)
On the arrival of the messengers, Varasinka Arachchi in company with Mullai-Malanar, Saraku-Malanar, Sivhai-Malanar & C., left Trichnopoly, came to Mulliyavalai, rendered services to built the tank called Tamaraikkulam, as well as some other tanks, and lived there. Nanti, son of Varasinka Arachchi, had seven daughters; they were chaste women, they sixty wells worshipped Siva and lived justly.
The seven temple at Mannakandai in the neighbourhood, called by the people Kanyakovil, “because there were seven Vanniyan Virgin Chieftainesses”, probably commemorate the seven daughters of Nanti.
The Nantikadal lagoon, “Sea of Nanti”, is no doubt called after him. (JPL – 1895.P12 & 13)
The people call these ruins Kanniya-Kovil, because there are seven temples, and they say there were seven Vanniyan Virgin Chieftainesses.
These were probably the seven daughters of Nanti who are referred to in Kalveddu Diary of June 26, 1890. (JPL.P.309)
இதன் மூலம் அக்காலத்தில் இங்கு சிவ வழிபாடு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்பதும், நந்திக்கடல் இருந்தமையும் தெளிவாகிறது. கண்ணகி இடைச்சிறுவர்களுக்கு நந்திக் கடற்கரையில் காட்சி தந்தாள் என்ற வரலாற்றுப் பாடல்களும் இதற்கு ஆதாரமாகின்றன.
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில்
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் பொங்கல் பற்றி 1839ஆம் ஆண்டு திருடைக் என்ற ஆங்கிலேயர் எழுதிய குறிப்பு ஒன்று முக்கியம் வாய்ந்ததாகும். இதனை ஜே.பி.லூயிஸ் தனது நூலில் ஆதாரமாக்கியுள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் இந்துக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும். கண்ணகி மதுரையில் இருந்த ஒரு தலைவனின் மகளாகும். அவளுடைய கற்பின் மகிமையாலும் அதீத சக்திகளாலும் வணக்கத்துக்குரியவளானாள்.
இந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் அலள் தனது முக்கிய வழிபாட்டிடத்தை வன்னிக்கு மாற்றிக் கொண்டாள். செட்டி இனத்தின் வழிபாட்டிற்குரியவள். பெரிய அம்மை மற்றும் சின்னமுத்து போன்றவற்றை சுகப்படுத்தும் சக்தி கொண்டவள்.
இந்தக் கோயிலுக்கான விழா மேமாத முடிவில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வர். வடமத்திய மாகாணத்தலிருந்து வரும் அநேக சிங்களவர்கள் இந்த விழாவில் பங்குபற்றுவர்.
நுவகலாவியவின் (ஆனுராதபுரம்) கிழக்குப் பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் ரட்டேமகத்தையா என்றழைக்கப்படும் தாமரைவௌ வன்னியன் சுமார் 100க்கும் மேற்பட்ட சிங்களவர்களுடன் வற்றாப்பளைக் கோவிலுக்குச் சென்று பொங்கலில் கலந்து கொண்டான். இவர்கள் பதவில் மற்றும் வெடிவைத்தகல்லுப் பகுதியினூடாக இங்கு வந்துள்ளனர். (குறிப்பு திரு. டைக். மே, 28.1839)
The chief Hindu festival is at the Vattappalai temple of Kannakai Amman, a few miles from Mullaitivu. Kannakai was the daughter of a Madura Chief, who became celebrated on account of her sanctity and miraculous powers, and who for a time made the Vanni her headquarters soon after it was colonize from India. She is the patron especially of the Chetty castle, and is supposed to have power over smallpox.
This festival takes place at the end of May or beginning of June, and is attended by thousands of people, many of them Sinhalese from the North-Central Province.
“The Tamarawewa Vanniya, noe Ratemahatmaya of the eastern division of Nuwarakalawiya, with about 100 Sinhalese, attended the temple ceremony at Vaddappalai. They came by Padavil and Vedivitakallu. (Diary of Mr. Dyke, May 28 1839) (JPL P.265)
தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தின் முன்றலில் கண்ணகி கோவலன் வரலாறு கோவலன் கூத்தாக வருடாந்தம் ஆட்பட்டு வருகிறது. அடங்காப்பற்றுப்பற்றியும் அங்கு பரவியிருந்த கலைகள் பற்றியும்
சில ஆய்வுத் தரவுகள்:
அடங்காப்பற்று வன்னி
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கை – இந்திய உறவுகள் மிகவும் பலமாக இருந்தன. தென்னிந்தியாவிற்கு மிகவும் அண்மையில் இலங்கை இருந்தமை அதற்கு ஒரு காரணமாகும். தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக் கரைகளில் இருந்து இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளுக்கு வந்து செல்வது சாதாரண நிகழ்வுகளாகும்.
அடங்காப்பற்றின் மேற்குக் கரையில் அரிப்பு, மன்னார், மாந்தை, விடத்தல் தீவு ஆகியன முக்கிய இறங்கு துறைகளாக இருந்துள்ளன. அடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு, அளம்பில் செம்மலை, தென்னமரவடி போன்ற இடங்கள் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கான இ;றங்கு துறைகளாக இருந்தன.
ஆடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு அளம்பில் செம்மலை தென்னமரவடி ஆகிய இடங்களுக்கு வந்த இந்தியர்கள் காஞ்சூரமோட்டை, குருத்தனூர் மலை, ஒதியமலை, அரியாமடு, ரூவன்மடு வழியாக அனுராதபுரம் சென்றுள்ளனர். பௌத்த மதம் ஆரம்பித்த காலத்தில் இவர்கள் சென்ற வீதிகளில் எல்லாம் பௌத்த மடலாயங்கள் கட்டப்பட்டன. குருந்தனூர் என்ற மலைப்பகுதி பியங்கல என அழைக்கப்பட்டது. புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது இங்கு வந்து சென்றதாக ஆங்கிலேய ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பௌத்த பிக்குமாரின் தியான மடாலயம் ஒன்று இங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பௌத்தர்கள் எனக் கூறினாலும் இவர்கள் அனைவரும் தமிழ் பௌத்தர்கள் என்பதற்கு இங்குள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் சான்று பகருகின்றன.
இங்கிருந்த இந்து ஆலயங்கள் பல பௌத்த மதப் பரம்பலின் போது இடிக்கப்பட்டு பௌத்த மடாலயங்கள் கட்டப்பட்டமையும், பௌத்த மடாலயங்களுக்கு மேல் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டதும் மாறி மாறி நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. கண்ணகி வரலாற்றைக் கூறும் சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரங்களான மாதவி, மற்றும் மணிமேகலை ஆகியோர் பௌத்த துறவிகளாக மாறியிருந்தமையும், வைகாசி விசாக தினத்தன்று பௌத்த சமயத்தினர் வெசாக் பண்டிகை கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் இலங்கையில் சிங்களப்பிரதேசங்கள் கோறளைகள் எனவும், தமிழ்ப்பிரதேசங்கள் பற்றுக்கள் எனவும் பிரிக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வந்தது. மன்னராட்சி இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் வடபகுதி, யாழ்ப்பாண இராச்சியம், அனுராதபுர இராஜதானி என்று பிரிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு இராஜதானிகளுக்கும் அடங்காத ஒரு பிரதேசமாக இருந்த பிரிவிற்கு ஷஅடங்காப்பற்று| என்று பெயரிட்டனர். இதன் எல்லைகள் வடக்கே ஆனையிறவு பரவைக்கடலும், தெற்கே நுவரகலாவிய மாவட்டமும், கிழக்கே முல்லைத்தீவுப் பெருங்கடலும், மேற்கே மன்னார்க் கடலுமாகும்.
ஆடங்காப்பற்றுப் பிரதேசத்தில் இராவணன் பரம்பரையினரான சைவசமய சிவபக்தர்களும், வேடர்களும் வாழ்ந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலயம், திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலயம் போன்ற பாடல் பெற்ற தலங்களும், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோவில், பனங்காம பஞ்சலிங்க சிவன் கோயில், வவுனிக்குளம் சிவன்கோயில் மற்றும் ஏனைய பல சிவன் கோவில்களும் இதற்குச் சான்று பகருகின்றன.
17ம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, புயல், வரட்சி போன்ற இயற்கை அழிவுகளாலும், கோதாரி – கொள்ளை, மலேரியா போன்ற நோய்களுக்குப் பயந்தும், மக்கள் குடிபெயர்ந்திருந்த காரணத்தினால், அடங்காப்பற்றின் கூடுதலான பிரதேசங்கள் காடுகளாகியிருந்தன. இதனால் வேறு பிரதேசங்களில் இருந்து வந்த அண்மைக்கால ஆய்வாரள்கள் அடங்காப்பற்றின் கிழக்குக் கரையோரப் பிரதேசத்தின் உட்பிரிவுகளை நெருங்க முடியாதிருந்தது. இதனால் இப்பிரதேசம் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவு இடம்பெறவில்லை. பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயம் மன்னார்ப் பிரதேசத்தில் இருந்ததினால் மாந்தை (மாதோடடம்) பற்றிப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடங்காப்பற்றுப் பிரதேசம் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளன. 1811இல் பண்டாரவன்னியம் உயிரிழந்த பின்னர் அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றிய ஆங்கிலேயர் இப்பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்தி குறிப்புகளைத் தந்துள்ளனர். ஆங்கிலேயரின் ஆய்வுகளின் மூலம் இந்தப் பிரதேசததில் கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்குப் பின்னர், இடம் பெற்ற நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதற்கும் 1895இல் ஜே.பி. லூயிஸ் எழுதி வெளியிட்ட ஷமனுவல் ஒவ் த வன்னி டிஸ்றிக்ஸ்| என்ற நூலே ஆதாரமாக உள்ளது.
அடங்காப்பற்று வன்னியின் கலைகள்
அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்களாக இருப்பவை பாரிய குளங்களும், பெரிய கற்குகைகளும் குன்றுகளுமாகும். வவுனிக்குளம், பதவியாக்குளம், பாவற்குளம், ஈறற்பெரியகுளம், தண்ணிமுறிப்புக் குளம், பண்டாரக்குளம், கணுக் கேணி. பெரியகுளம், மாமடு ஓலுமடு, கனகராயன்குளம், விளான்குளம் (வவுனியன் – விளான் குளம்) போன்ற பெரிய குளங்கள் உட்பட சுமார் 730க்கும் மேற்பட்ட குளங்கள் வவுனியா முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருக்கின்றன.
திரு. பார்க்கர், திரு வவுலர், திரு. நெவில் ஆகிய ஆங்கிலேய நிர்வாகிகள் குளங்களைப் பற்றியும், கல்வெட்டுக்களைப் பற்றியும், குருந்தனூர் மலை, கும்பகன்னன் குன்று ஆகியவற்றைப் பற்றிய முக்கிய குறிப்புகளைத் தந்துள்ளனர். சில குளங்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் கட்டப்படவையெனவும், வேறு சில கி.பி. முதலாம் இரண்டாம் மூன்றாம் நாலாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையெனும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குளங்களின் கீழ் விவசாயத்தை தமது தொழிலாகக் கொண்டவர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் வரலாற்றுதய காலத்திற்கு முன்னர் அடங்காப்பற்றின் கலைகள் விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கிறது.
தென்னிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் அங்கிருந்த கலை வடிவங்களும் இங்கு பரம்பியிருக்கின்றன.
அடங்காப்பற்று வன்னியின் கலை வடிவங்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கிராமியக் கலைகள்
2. தென்னிந்திய ஆதிக்கமும் பின்னர் தோன்றிய கலைகளும்
விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கிராமியக் கலைகள்
மனிதனின் பிறப்போடு கலையுணர்வும் பிறந்து விட்டது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, தாயின் இருதயத் துடிப்பில் வரும் ஓசையை உணரத் தொடங்குகின்றது. குழந்தை பிறந்ததும் ஓ…. ஓ… என்று ஓசையில் தாய் ஆரம்பிக்கம் தாலாட்டுக்கு ஓசை நயச் சொற்கள் சேர்க்கப்பட்டு ஆராரோ ஆரிவரோ என்று பாடப்படுகின்றது. பின்னர் குழந்தையின் வளர்ச்சியையொட்டி தாயாரின் கற்பனை வளத்திற்கேற்ப சொற்கட்டுகள் சேர்க்கப்பட்டு தாலாட்டுப் பாடப்படுகிறது.
மனிதனின் வளர்ச்சியோடு சேர்த்து ஒவ்வொரு பருவத்திலும் பாடல்கள் பாடப்படுகின்றன. பிள்ளைகள் வளரத் தொடங்கியதும் ஷஷசாங்தாடம்மா சாய்ந்தாடு|| என்றும், விடலைப்பருவம் அடைந்ததும் விளையாட்டுக்களோடு சம்பந்தப்பட்ட ஷசடுகுடு சடுகுடு| ஷதெந்தனத் தெனா| என்ற ஊஞ்சல் தருக்களுடன் கூடிய பாடல்களும் மற்றும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களையும் குறிப்பிடலாம். வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள் மிருகங்களைப் போலக் குரல் எழுப்பவும், வேட்டையாடலைத் தெளிவுபடுத்த ஓசைகளை எழுப்பி ஒலிபரப்பும் முறையிலும் கை தேர்ந்தவர்கள்.
மனிதர்கள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்ததும் அதனோடு சம்பந்தப்படுத்தி பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள். நிலத்தைப் பண்படுத்தும் போது மழையை வேண்டியும், களை பிடுங்கும்போதும் களைப்புத் தீரவும் பாடல்களைப் பாடினாரகள். குhவல் செய்யும் போது துணைக்காக கடவுளை வேண்டினார்கள். நெல் விளைந்ததும் பரத்தை போட்டு அருவி வெட்டும் போது அருவி வெட்டுப்ப பாடல், எட்பட்டிகளைச் சேர்க்கும் போது குருவிகளைத் துரத்த சூ… சூ… என்று ஓசையெழுப்பி ஓர் பாடல், மாட்டினால் சூடடடிக்கும் போது மாடுகளை வளைக்க ஓர் பாடல், காலையில் முகப்பொலிவைப் பிரித்து கூரனை (நல்ல நெல் மணிகள்) எடுக்கத் தூற்றும் போது அதற்கும் ஒரு பாடல். வழங்கிய சேவைகளுக்காக விவசாயியிடம் தமது பங்குகளைப் பெற்றுச் செல்ல வரும் குடியானவர்கள் விவசாயியைப் வாழ்த்திப்பாடும் பாடல் எனச் சகல சந்தர்ப்பங்களிலும் தொழிற்பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அறுவடை முடிந்து விளைச்சல் வீடு வந்து சேர்ந்ததும் விவசாயிகளினதும், அவனை அண்டி வாழும் ஏனைய குடியானவர்களினதும் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது. அடங்காப்பற்றில் மலைகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாயும் பெருநதிகள் இல்லாத காரணத்தால் பருவகால மழையை நம்பி இரண்டு போகங்கள் செய்வதே வழக்கம். ஆகவே அடுத்த போகம் ஆரம்பிக்கும்வரை உள்ள இடைப்பட்ட காலம், விவசாயிகளுக்கும் ஏனையோருக்கும் ஒரு வசந்த காலமாகும்.
இக்காலத்துள் தெய்வங்களை வழிபடுவதற்கான பல தினங்கள் அனுஷ;டிக்கப்படுகின்றன. இவற்றுள் சூரியனுக்கு நன்றி கூறத் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், குளுக்கட்டுப் பிள்ளையாருக்கு நிறைமணி போடல், காவல் தெய்வங்களான ஐயன், வைரவர் போன்ற தெய்வங்களுக்கு மடைபோடுதல், பிள்ளையார் கதை படித்தல், பாரதப்படிப்பு, திருவிழாக்கள், வேட்டைத் திருவிழா, சூரன்போர் போன்ற பல சமய வைபவங்கள் இடம் பெறுவது வழக்கம். வசந்தகாலத்தோடு சம்பந்தப்பட்ட ஆட்டங்களாக மாடுபிடிச் சண்டை (ஆநிரை கவர்தல்), குடமூதல், வேதாள ஆட்டம், வசந்தனாட்டம், மகிடி போன்றவற்றைக் கூறலாம்.
இவை சம்பந்தமான ஏராளமான பாடல்கள், வாய் வழியாக வந்து மறைந்து கொண்டிருக்கின்றன. அவை எழுத்துருப் பெற வேண்டும்.
தென்னிந்திய படையெடுப்புகளின்போது வன்னியர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆரம்ப காலத்தில் வந்த வன்னியர்கள் இலங்கையின் தென்பகுதிகளில் நிலை கொண்டனர். குளக்கோட்டன் காலத்தில் வந்த வன்னியர்கள் இலங்கையின் வடபகுதியிலும், கிழக்குக் கரையிலும் குடியேற்றப்பட்டனர். வன்னியர்;கள் இலங்கையின் தமிழ்ப் பிரதேசதங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் ஆட்சி அதிகாரிகளாக இருந்துள்ளனர். குளக்கோட்டு மன்னனின் பரம்பரையினரால் ஆட்சி அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வன்னியர்கள் அடங்காத பிரதேசமான அடங்காப்பற்றிற்கு வந்து பனங்காமத்தில் நிர்வாகம் நடத்தினர். இவர்கள் அரசனுக்கு ஊழியம் செய்பவர்களாக மட்டுமே இருந்தனர்.
எந்த ஆட்சிக்கும் அடங்காத பூர்வீகக் குடிகள் வாழ்ந்த அடங்காப்பற்றுக்கு வந்த வன்னியர்கள் பூர்வீகக் குடிகளான இராவணன் பரம்பரையைச் சேர்ந்த சிவபக்தர்களுடனும், வேடர்களுடனும் சேர்ந்து கொண்டனர். எதற்கும் அடங்காத பூர்வீகக் குடிகளின் உணர்வுகள் இங்கு வந்து சேர்ந்த வன்னயர்களுக்கும் வந்ததில் வியப்பில்லை.
வன்னியர்களும் அவர்களின் அழைப்பையேற்று வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய மாப்பாண வேளாளர்களும், ஏனைய வேளாளர்களும் மற்றைய குடியினரும் வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் அடங்காப்பற்றின் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அடக்கி ஆக்கரமிப்புச் செய்த இடங்களுக்குத் தம்மை சிற்றரசர்களாக்கிக் கொண்டனர்.
விவசாயம் செழித்தோங்கி இருந்தமையே வன்னியர்கள் அடங்காப்பாற்றுப் பிரதேசத்திற்கு வருவதற்குக் காரணமாகும். ஏனெனில் விவசாயம் செய்து அதன் வருமானத்தை சிவன் கோயில்களுக்குக் கொடுத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்பதே அரசர்களுடைய கட்டளைகளாக இருந்தன. இதனால் அரசர்களுக்குத் திறை செலுத்துவதே வன்னயர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.
சமயச் சடங்குகளும் கலைகளும்
சிவன் வழிபாடு மேலோங்கியிருந்த அடங்காப்பற்றில் தென்னிந்தியப் படையெடுப்பகளின் பின்னர் பலவித வழிபாட்டு முறைகள் அறிமுகமாகின. கண்ணகி வழிபாடு ஆரம்பித்ததும், அவளின் வரலாற்றைப் படிப்பது முக்கிய இடம் பெற்றது. இது சிலம்பு கூறல் படிப்பு என அழைக்கப்பட்டது. கண்ணகி மதுரையை எரித்த பின்னர் இலங்கை வந்து தனது கோபாவேசத்தை தணித்துக் கொள்ள பத்து இடங்களில் தரிசித்துச் சென்றதாகவும் பத்தாவது இடமே வற்றாப்பளையெனவும், இங்கிருந்து கரைப்பாதையாக கதிர்காமம் சென்றாள் என்ற நம்பிக்கையையும், கண்ணகித் தெய்வம் சின்னமுத்து, கொப்பளிப்பான், அம்மை போன்ற சூட்டு வருத்தங்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவள் என்ற பக்தி உணர்வையும் மேலும் அதிகரிக்க இந்தச் சிலப்பு கூறல் படிப்பு இப்பிரதேச மக்களுக்கு உதவியிருக்கிறது.
கண்ணகிக்குக் கிராமிய வழக்கப்படி பொங்கல் வைத்து நேரும்போது பூசாரியார் பறை முழங்க ஆடும் ஆட்டம் பல வகையான தாளக்கட்டுக்களுடன் கூடியது. இந்த ஆட்ட முறையும் தாளக்கட்டும் வேறுபல கலைவடிவங்களிலும் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சேரன் செங்குட்டுவன் ஆட்சியின் போது கண்ணகி வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. கி.பி. நாலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கயவாகு மன்னன் இந்தியாவிலிருந்த கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினான் என வரலாறுகள் சுட்டுகின்றன. பத்தினித் தெய்வமான கண்ணகியின் சிலை, இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட போது, பத்தாவது இடமாக வற்றாப்பளையில் வைக்கப்பட்டதாகவும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கௌதம புத்தரின் புனித தந்தம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது பல இடங்களில் வைக்கப்பட்டு தரிசிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பாரம்பரியத்தை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
எந்தப் பிரபலமான ஊடகம் மக்களை இலகுவாகச் சென்றடைகின்றதோ அந்த ஊடகத்தைப் பயன்படுத்துவது கொள்கை பரப்பாளர்களின் நோக்கமாகும். அடங்காப்பற்றுப் பிரதேச மக்கள் சிவபக்தியுள்ளவர்கள் என்ற காரணத்தினால் இங்கு பிரபலமாக இருந்த ஆட்டக் கூத்து முறையை, கண்ணகி வழிபாட்டினைப் பரப்பும் ஒரு உத்தியாகப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது இந்தியாவில் பிரபலம் பெற்றிருந்த கூத்து முறையை இதற்கென இங்கு அறிமுகப்படுத்தியும் இருக்கலாம். ஏனெனில் மானுடப் பெண் ஒருவரை வழிபாட்டிற்குரியவராக்குவதற்குப் பலவித எதிர்ப்புகள் தொன்று தொட்டு கிளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் முல்லைத்தீவிற்கு அண்மையிலுள்ள அளம்பில் செம்மலைப் பகுதிகளில் இறங்கி அனுராதபுரம் சென்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனால் இந்தியாவிலிருந்த பலவித கூத்து முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கின்றன.
கண்ணகியின் மீது அதி தீவிர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கோவலன் கண்ணகி சரிதத்தை கூத்தாக ஆடுதல் ஒரு சமயச் சடங்காகவே நடத்தப்பட்டு வந்துள்ளது. கோயிலுக்கு நேர்த்தி வைத்து விரதமிருந்து மிகவும் ஆசாரத்தோடு கோவலன் கூத்தினை ஆடுவது வழக்கம். பெண்கள் கோவலன் கூத்தில் ஆடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கண்ணகி உக்கிரம் கொண்டவள் என்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் தேசத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டாள். அதனால் பெண்கள் நடிக்கக் கூடாது எனக் காரணம் கூறப்பட்டது. பெண்கள் மாதவிடாயக்கு உள்ளாகும் காலத்தில் அவர்கள் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை விதித்த தென்னிந்திப் பாரம்பரியம் மிகவும் கடுமையாக இங்கும் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது.
கண்ணகி வரலாற்றோடு சம்பந்தப்படுத்தி வெடியரசன் கூத்துக்கதையும் எழுதப்பட்டுள்ளது. வெடியரசன் கூத்திலே இலங்கைக்கு நாகமணி முத்தெடுக்க வந்த அரசனுடைய வரலாறு கூறப்படுகிறது. வெடியரசனிடம் நாகமணிகள் இருந்ததாகவும், அவற்றைப் பெறுவதற்கு போர் நடைபெற்றதாகவும், பின்னர் அந்த நாகமணிகள் கண்ணகியின் காற்சிலம்பில் வைக்கப்பட்டதாகவும், கண்ணகி வரலாற்றின் ஒரு உபகதை போல வெடியரசன் கூத்து உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்தக் கூத்துக்கள் கண்ணகி வழிபாட்டை நேர கொள்ளச் செய்வதையே சீரிய நோக்காகக் கொண்டவை எனக் கூறினால் அதில் தவறேதும் இல்லை.
கூத்துக்களின் கதையமைப்புகளில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் பற்றிக் கூறப்படுகிறது. இவை கதாசிரியர்களின் கற்பனையா என்பது இந்திய – இலங்கை இலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். எது எப்படியிருந்த போதிலும் இந்தத் தொடர்புகளைத் துணிந்து தமது நாடகங்களில் புகுத்தி எழுதி வைத்த கதாசிரியர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
கோவலன் கூத்து அரங்கக் கலையாக மாற்றப்பட்டாலும், வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் முன்றலில் நேர்த்திக் கடனுக்காகப் பாரம்பரியமாக ஆடும் முறை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தால் கண்ணகை அம்மன் கிராமிய வழிபாட்டு முறைக்கு மேலும் உரமூட்டும்.