தாயத்தெய்வ வழிபாட்டு முறை பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றது. இதனாலேதான் பெண் தெய்வங்களும் அவற்றின் வழிபாட்டு முறைகளும் மிகக் கூடுதலான இடத்தினை அம்மக்களிடையே பெற்றுக்கொண்டுள்ளன. மரபு வழியாகவே பெண்ணைத்தெய்வமாகவும் தெய்வத்தைப்பெண்ணாகவும் கொண்டு வணங்கும் முறை திராவிடரிடையே வேரூண்றிப் பரவுவதற்க்கும் தாய்த்தெய்வ வழிபாட்டு முறையே காரணமாய் இருந்திருக்க வேண்டும். திராவிடப் பண்பாடும் ஆரியப்பண்பாடும் கலந்தும் உருவான இந்து சமயத்திலே தாய்த்தெய்வ வழிபாடு அல்லது சக்தி வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. சக்தியின் அம்சமாகவே ஏனைய பெண் தெய்வங்கள் யாவும் தோற்றம் பெறுகின்றன.கொற்றவை, மாரி, ஜயை போன்ற பெண் தெய்வங்கள் யாவும் சக்தியின் அவதாரமாகவே கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையிலேதான் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாம் கண்ணகிக்கும் வழிபாடு தோண்றியிருக்கவேண்டும்.
கண்ணகி கதை பற்றி நாம் அறிந்து கொள்ள மிக முக்கிமானதும் மிகப்பழமை பொருந்தியதுமான ஆதாரம் சிலப்பதிகாரமே. இளங்கோவடிகள் கண்ணகி வரலாற்றுக்குக் காவிய வடிவம் கொடுப்பதற்க்கு முன்பே பண்டைக்கால மக்களிடையே இக்கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உள! இதனை நாம் அறிந்கொள்ள நற்றணைப் பாடல் ஒன்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவும் துணை செய்கின்றன. இவ்வாறு மரபு வழியாக இருந்து வந்த கண்ணகி பற்றிய கதைகளே சிலப்பதிகாரத்தைக் காவிய வடிவமாக எழுதி முடிப்பதற்க்கு இளங்கோவடிகளுக்கு உதவியிருக்க வேண்டும்.
சிலப்பதிகாரத்திற் பொதிந்துள்ள பல கதைகள் தமிழகப்பகுதிகளிலே பொதுமக்களால் வில்லுப்பாட்டாகவும், மலையாளப்பகுதிகளில் அம்மானை உருவத்தில் நாடோடிப்பாடல்களாகவும் பாடப்பட்டு வந்துள்ளன. புகழேந்திப்புலவர் இயற்றியதாகக் கொள்ளப்படும கோவலன் கதை அம்மானை உருவத்திலே பாடப்படுள்ளது. அடீத போலக் கோவலன் கதைபற்றி மலையாள நாட்டில் வழங்குவதும் தமிழ் மொழியில் அமைந்ததுமான காதற்பிரபந்தம் ஒன்ற உண்டு எனவும் அறிய முடிகின்றது.
தமிழகத்திற் சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை கண்ணகியாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தின் வழக்குரை கதையிலே பொற்றவை, காளி என்னும் தெய்வங்களோடு கண்ணகியின் தோற்றம் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது. எனவே சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை , காளி ஆகிய தெய்வங்களின் அம்சங்கள் கண்ணகியோடு சேர்க்கப்பட்டும் கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றிருக்கலாம்.
சேரன் செங்குட்டுவன் சேர நாட்டிற் கண்ணகிக்கு விழாவெடுத்தபோது கடல் சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் சென்று சிறப்பித்தான் எனச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையும் வரந்தருகாதையும் கூறியுள்ளன. இது போலவே பாண்டியன் வெற்றிவேல் செழியனும் சோழன் பெருங்கிள்ளியும் கொங்கிளக்கோசரும் மாளுவ வேந்தரும் கண்ணகி விழாவிற் பங்கு கொண்டு தத்தம் நாடுகளுக்கும் கண்ணகியை எழுந்தருளுமாறு வேண்டி நின்றனர்.
இவ்வாறு தத்தம் நாடுகளுக்கு எழுந்தருழுமாறு வேண்டிய அரசர்களில் ஒருவனாகிய கயவாகு வேந்தனே இவ்வழிபாடு ஈழத்திற் பரவி வேரூன்றக் காரணமாயிருந்தான். இதனை ஈழத்து வரலாற்று நூலான இராஜரத்னாகரவும் கஐபாகத்தாவ என்னும் பத்தினி வரலாறு கூறும் சிங்கள நூலும் குறிப்பிடுகின்றன. எனினும் இராஜாவலிய சிலப்பதிகாரக் கதையினின்றும் சிறிது வேறபட்ட கதையினையே கூறியுள்ளது. இதன் மூலம் கஐபாகு பத்தினித் தெய்வத்தின் சிலம்பையும் நான்கு கோயில்களின் தெய்வங்களையும் ஆயுதச் சின்னங்னளையும் வரவழைத்துப் பெற்றுக்கொண்டு வாலகம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த புனிதப் பாத்திரத்தையும் பெற்றுக்கொண்டு ஈழம் மீண்டான் என அறிய முடிகின்றது. இச் செய்திகளிற் சிலவற்றைக் கோகில சந்தேச நூலும் கூறும். எனவே கயவாகுவே ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச்சி பெறக் காரணமாயிருந்தான் எனக் கூறலாம்.
கண்ணகி வழிபாடு ஈழத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று. திமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடெனவும் கண்ணகை அம்மன் வழிபாடெனவும் வளர்ச்சி பெற்ற போது, அது சிங்ஙகள மக்களிடையே பத்தினி வழிபாடாக மலர்ந்தது. இதனாலே தமிழில் உள்ள கண்ணகியைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்களைப் கோலச் சிங்களத்திலும் பல பத்தினி காவியங்கள் தோன்றலாயின. புத்தினிஹல்ல, பாளங்கஹல்ல, பத்தினி கத்தாவ , பத்தினி விலாபய, கயபாகத்தாவ, வயந்தி மாலா, அம்ப பத்தினி உபத, அம்பவிதுமன, மல்பத்தினி உபத, மாதேவி கத்தாவ, பத்தினி யாதின்ன, பத்தினி பிளிம, பத்தினி கோள்முற, பாளாங்க மறுவீமே சிந்தவ, பண்டி நெத்த மெகு உபத்த, அங்கெலி உபத்த, சலம்ப கத்தாவ முதலிய சிங்கள்ப் பத்தினி இலக்கியங்கள் இதற்குச் சன்றாகும்.
ஈழத்துக்கு இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதந்தோறும் தலைநகரிற் பத்தினிக்குப் பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பை யானையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று பெருவிழா கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு தொட்டு இன்றுவரை சேரநாட்டின் எல்லப்பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கி வருதல் குறிப்பிடத்தக்கது. கயவாகு மன்னன் கண்ணகி விழாவிற் கலந்து திரும்பி வந்த போது அதே றையைத்தான் பின்பற்றினான் எனக்கருத வேண்டியுள்ளது. இது கண்டி மாநகரில் நடைபெறும் எசல பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் எனக் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது ‘மத்தியகாலத்துச் சிங்களக்கலை’ என்னும் நூலிற் கூறிப்போந்தார். ‘ஆடித்திங்களகவையினாங் கோடி பாடி விழா’ பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவதும் ஆடி ஆவணி மாதங்களில் எசல பெரஹரா நடைபெறுவதும் சான்றாக அமைகின்றது.
புத்தினி வழிபாடு சிங்கள மக்களிடையே சமய வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. இத் தெய்வத்தினைத் தொற்று நோய்களின், அதாவது அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்களின் அதிதேவதையாக அவர்கள் கொள்ளதோடு கண்ணகியைத் துர்க்கையாகவும் எட்டுக் காளிகள் சூழ்திருக்கும் ஈழத்தின் காவற் தெய்வமும் இதுவே. எனக்கொள்வர். இது சம்பந்தமான ஜதீகங்கள் பல சிங்கள மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன. நிக்கவவக் குகையிற் கண்டெடுக்கப்பட்ட சந்தணக்கட்டையாலான கண்ணகை, கோவலன் சிலைகள் கயவாகு மன்னனால் கொண்டுவரப்பட்டதாய் இருக்கலாம். என ஹென்றி பார்க்கர் கருதுகின்றார்.